தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழ்ந்த தாழமுக்கம் 28 ஆம் திகதி இன்று அதிகாலை 02.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அது இன்று (28) மேலும் தீவிரமடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் வடக்கு-வடமேற்கு திசை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த அமைப்பின் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்.
வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் மிகவும் வலுவான பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.