காரைத்தீவு விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்..!

0
78

அம்பாறை, காரைத்தீவு பிரதேசத்தில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதில் 05 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மத்ரஸா பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மத்ரஸா பாடசாலையின் அதிபர், அதன் ஆசிரியர் ஒருவர் மற்றும் குறித்த உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவரும் நேற்று (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி நேற்று பிற்பகல் அவர்களை சம்மாந்துறை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து மத்ரஸா பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உழவு இயந்திரத்தின் உதவியாளர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 26ஆம் திகதி பிற்பகல் நேரத்தில் 11 மாணவர்கள் மற்றும் சிலர் பயணித்த உழவு இயந்திரம் நீரோட்டத்தில் சிக்கி கவிழ்ந்ததில் 6 மாணவர்கள், உழவு இயந்திர சாரதி உட்பட 8 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயினர்.

சம்பவத்தில் உயிரிழந்த 5 மாணவர்களின் சடலங்கள், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றுமொரு நபரின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன மற்றைய மாணவனை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆபத்து காரணமாக பேருந்து சேவை கூட நிறுத்தப்பட்டிருந்த போதும் இராணுவத்தினரின் அறிவுறுத்தலை மீறி பணத்திற்காக பயணிகளை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரத்தில் பிள்ளைகளை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லுமாறு அதிபர் பணிப்புரை வழங்கியதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here