தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் நேற்று (29) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும், காங்கசன்துறையிலிருந்து வடகிழக்கே 280 கிலோமீற்றர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு திசையில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை இன்று (30) மாலை அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதன்படி, நாட்டின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக திணைக்களம் இன்று காலை தெரிவித்துள்ளது.
எனினும் வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.
குறிப்பாக வட மாகாணத்தில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் அதேவேளை, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது 50-55 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களை அறிவுறுத்தப்படுகின்றார்கள்.