மழை, வெள்ளத்தால் அழிவடைந்த பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40, 000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
“நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40, 000 ரூபாய்க்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும். நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை குறைந்த பின்னர் பயிர்ச் சேதம் தொடர்பான விவரங்களை சேகரித்து நட்டஈடு வழங்கப்படும்.
அழிவடைந்த பயிர்களை மீளப் பயிரிடுவதற்காக விவசாயிகளுக்கு இலவச பயிர் விதைகள் வழங்கும் முறைமை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட பயிர்களுக்கு மேலதிகமாக மலையகம் மற்றும் தாழ்நில மரக்கறி விவசாயிகள் மற்றும் பழ விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் ஓரளவு நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.
அத்துடன் சீரற்ற காலநிலையால் பெரும்போக விவசாயத்தில் 4,800 ஏக்கர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3,900 ஏக்கர் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.