திடீர் காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அதேபோன்று காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் கிளிநொச்சி மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்த 28 வயதுடைய ஒருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அத்துடன், நாவற்குழி பகுதியை சேர்ந்த ஒருவரும் காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவர்கள் மூவரின் காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சல் அல்லது உண்ணிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
அந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கூற்று மாதிரிகள் சட்டமருத்துவ அதிகாரியால் மேலதிக பரிசோதனைகளுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது,
இரு நாள்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகளை சாதாரண விடயமாகக் கடந்துவிட முடியாது. கடுமையான சுவாசத் தொகுதி பாதிப்புக் காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன.
கடந்த சில நாள்களாக வடக்கில் கடும் மழை பெய்திருக்கும் நிலையில் எலிக்காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன.
ஆனால் இந்த உயிரிழப்புக்களுக்குக் எலிக்காய்ச்சல் காரணம் என்று இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
உண்ணிக்காய்ச்சல் அல்லது ஏதேனும் வைரஸ் காய்ச்சல்கூடக் காரணமாக இருக்கலாம். கொழும்பில் இருந்து ஆய்வறிக்கை வந்தபின்னரே காரணத்தைச் சரியாகக் கூறமுடியும்.
ஆயினும், பொதுமக்கள் இதுதொடர்பாக விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம். பொதுமக்கள் சுகாதாரத்தைச் சரியாகப் பேணிச் செயற்பட வேண்டியது அவசியம்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் மற்றும் சுத்தமான குடிதண்ணீர் பாவனை அவசியமானது. அத்துடன் காய்ச்சல், இருமல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாககத் தகுதிவாய்ந்த மருத்துவரை நாடி உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்