எலிக்காய்ச்சலால் பாதிப்புற்றவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிப்பு.!

0
251

நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 10 ஆயிரத்துக்கும் அண்ணளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை மற்றும் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் குமுது வீரகோன்ன் தெரிவித்தார்.

எலிக்காய்ச்சல் பரவல் குறித்து புதன்கிழமை (11) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த வருடம் மாத்திரம் நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சலால் பாதிப்புற்ற 9 ஆயிரம் பேர் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் 200 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே அதிக நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

10 தொடக்கம் 12 மாவட்டங்கள் அதி உயர் அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 10 ஆயிரத்துக்கும் அண்ணளவான நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் பாரிய அதிகரிப்பைக் காணக் கூடியதாக உள்ளது.

மழையுடன் கூடிய காலநிலை மற்றும் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்படும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. லெப்டோஸ்பைரா எனப்படும் ஒருவகை பற்றீரியா தொற்றால் இக்காய்ச்சல் ஏற்படுகிறது. பெருமளவில், நோய்த் தொற்றுக்கு ஆளான எலிகளின் சிறுநீர் மூலம் மனிதர்களுக்கு பரவுவதால் எலிக்காய்ச்சல் என அழைக்கப்படுகிறது.

எனினும் நாய், மாடு, பன்றி, ஆடு போன்ற விலங்குகளின் மூலம் இது பரவலாம். பற்றீரியா பரவியுள்ள நீர்நிலைகள், சதுப்பு நிலங்களில் நடமாடுதல், விளையாடுதல், பயிர்ச்செய்கை மற்றும் அகழ்வு பணிகளில் ஈடுபடுவதன் மூலம் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

ஆகையால் பெரும்போக பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் அவதானத்துடன் செயற்படுவது நல்லது. மேலும் சுற்றுலாவுக்காக செல்வோர் நீர் தேங்கியுள்ள பகுதிகள் மற்றும் பழக்கமில்லாத நீர்நிலைகளில் நீராடுதல், விளையாட்டு சாகசங்களில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளலாம்.

நீர், மண்ணில் கலந்துள்ள பற்றீரியா உடலில் உள்ள சிறு புண்கள், காயங்கள், கீறல்கள் மற்றும் அவ்வாறான நீரை அருந்துவதன் மூலமும் உடலை வந்தடைகின்றது.

நோய் அறிகுறிகள் வெளிப்பட சுமார் 7 தொடக்கம் 14 நாட்களாகக் கூடும். ஆகையால் அதானம் மிக்க பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் விவசாயம், இரத்தினக்கல் அகழ்வு பணியை மேற்கொள்பவர்கள் காய்ச்சல்கள் ஏதும் ஏற்படின் உடனடியாக வைத்தியசாலையை நாடுவது நல்லது. நோய்த் தொற்றுக்கு ஆளானவரிடம் கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் வலி, கண் சிவத்தல், வாந்தியும் குமட்டலும் போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

நோய் நிலைமையை ஆரம்பத்தில் இனங்கண்டு சிகிச்சை பெறுவது நல்லது. இல்லையேல் கடுமையான விளைவுகளும் உயிரிழப்பும் ஏற்படலாம். அத்துடன் நோய் தொற்று காரணமாக சிறுநீரகம், இதயம், மூளை, நுரையீரல், மண்ணீரல் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழப்பதற்கும் வாய்ப்புள்ளது.

விவசாயிகளின் நலன் கருதி சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மூலம் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்படுகிறது. அவற்றை பொது சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலால் ஐவர் உயிரிழந்துள்ளனர். சுவாசக் குழாயில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எவ்வாறெனினும் எலிக்காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தற்போது பரிசோதனைகள் இடம்பெற்று வருகிறது. பரிசோதனை அறிக்கை கிடைக்க பெற்ற உடன் உறுதியான காரணம் வெளியிடப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here