தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ மற்றும் இமதுவ பகுதிகளில் நேற்று (11) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பன்னிரெண்டு மற்றும் பத்து வயதுடைய பாடசாலை மாணவிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல விடயங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, காரை ஓட்டி வந்த தந்தைக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.
மாத்தறை – நுபே பகுதியைச் சேர்ந்த பன்னிரெண்டு வயதுடைய இசுரி ரதீஷா மற்றும் அவரது சகோதரி பத்து வயதுடைய செனுலி தம்சரா மற்றும் அவரது பெற்றோருடன் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு நேற்று வந்துள்ளார்.
சிகிச்சை முடிந்து மாத்தறை நோக்கி தெற்கு அதிவேக வீதி வழியாக காரில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் பயணித்த கார் பின்னதுவ மற்றும் இமதுவ பகுதிக்கு இடையில் இரவு 11 மணியளவில் முன்னால் சென்ற லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது பத்து வயது சிறுமி செனுலி தம்சரா தனது தாயாருடன் முன்பக்க இருக்கையில் பயணித்துள்ள நிலையில், பன்னிரெண்டு வயதுடைய இசுரி ரதீஷா பின் இருக்கையில் பயணித்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த தாய், தந்தை மற்றும் மகள் இருவரையும் வீதியில் பயணித்தவர்கள் இணைந்து வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், பத்து வயது சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகவும், பன்னிரண்டு வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காரும் பலத்த சேதமடைந்தது. உயிரிழந்த இரு சிறுமிகளும் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவிகள் எனவும் அவர்களது தாயார் மாத்தறை புனித தோமஸ் வித்தியாலயத்தில் ஆசிரியை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளின் தந்தை வர்த்தகர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உயிரிழந்த இரு சிறுமிகளின் சடலங்களும் நேற்று பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரு சிறுமிகளின் உடல்கள் நேற்று மதியம் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.