எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்
வங்காள விரிகுடாவில் கடந்த 14 ஆம் திகதி அன்று உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது அம்பாறைக்கு கிழக்காக 340 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது.
இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கிழக்கு மாகாணத்திற்கு அண்மித்து பின்னர் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மாகாணம், தமிழக கடற்பகுதிகளை அண்மித்ததாக இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக நேற்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு கிடைத்த மழை இன்று மாலை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
நாளையும் நாளை மறுதினமும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிகக்கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற் பகுதிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
இன்று அதிகாலை 2.00 மணி முதல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் சாரீரப்பதன் அளவில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.
அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் 72 வீதமாகவும், கிளிநொச்சியில் 76 வீதமாகவும் மன்னாரின் சில இடங்களில் 77 வீதமாகவும் காணப்படுகின்றது.
இதன் காரணமாகவே இன்று அதிகாலை முதல் குளிரான வானிலை நிலவுகிறது.
அதேவேளை திருகோணமலையில் 96 வீதமாகவும், வவுனியாவில் 94 வீதமாகவும் சாரீரப்பதன் நிலவுவதாகத்தெரிவுத்துள்ளார்.