நேற்று (17) நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சிலாபம், களுத்துறை வடக்கு, வெல்லவாய மற்றும் எஹலியகொட பொலிஸ் பிரிவுகளில் நேற்றைய தினம் (17) இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் மஹவெவ பிரதேசத்தில் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் வேன் ஒன்று மோதி விபத்துதொன்று இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் அவரது மகளும் படுகாயமடைந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 50 வயதுடைய போவத்த, பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இதேவேளை, களுத்துறை – ஹொரணை வீதியின் கல்பாத்த பிரதேசத்தில் துவிச்சக்கரவண்டியை கட்டுப்படுத்த முடியாமல் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து கல்பாத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். களுத்துறை வடக்கு, கல்பாத்த பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை வெல்லவாய தனமல்வில வீதியின் ஹந்தபானாகல பிரதேசத்தில் இராணுவ ஜீப் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெளுல்ல, ஹெத்திலிவெவ பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் மெரேகெலே தோட்டம் பிரதேசத்தில் வீதியைக் கடந்த பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி மற்றும் சைக்கிள் ஓட்டுநர் எஹலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாதசாரி உயிரிழந்துள்ளனர். பொஹொரபாவ, பரகடுவ பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.