சுனாமி பேரழிவின் 20 ஆண்டு நிறைவு – இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி..!

0
24

35,000க்கும் அதிகமான உயிர்களை பலிகொண்ட சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் (26) 20 வருடங்கள் நிறைவடைகிறது.

இதற்கமைய நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களினால் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் இன்று “தேசிய பாதுகாப்பு தினம்” அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

2004 ஆம் ஆண்டு சுனாமியில் 35,000 க்கும் அதிகமானோர் பலியானதுடன் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். அதன்படி, 2005ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

இவ்வருடம் “தேசிய பாதுகாப்பு தினத்தை” மாவட்ட மட்டத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், பிரதான நிகழ்வு காலி “பெரலிய சுனாமி நினைவுத் தூபிக்கு” ​​முன்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் இன்று காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், 2004 இல் நாட்டை பாதித்த சுனாமியுடன், சுனாமி எச்சரிக்கைகளைக் கண்டறிய நாட்டின் 14 மாவட்டங்களில் 77 சுனாமி கோபுரங்கள் நிறுவப்பட்டன.

எவ்வாறாயினும், 77 சுனாமி கோபுரங்களில் 5க்கும் குறைவானவையே தற்போது செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுனாமி கோபுரங்களை நிறுவுவதற்கான தொழில்நுட்ப ஆதரவை அமெரிக்க நிறுவனம் ஒன்று வழங்கியுள்ளதுடன், கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் பல தடவைகள் அவற்றை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், குறித்த நிறுவனம் உற்பத்தியை இடைநிறுத்தியதன் காரணமாக, செயலிழந்த கோபுரங்களை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மாவட்ட மட்டத்தில், இராணுவத்தினர் மற்றும் பொலிசார் கோபுரங்களுக்கு பொறுப்பாக இருந்ததுடன் அவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுகளால் கண்காணிக்கப்பட்டன.

சுனாமி அனர்த்தம் தொடர்பில் சர்வதேச மட்டத்திலிருந்து வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு கிடைக்கும் தகவலையடுத்து, வளிமண்டலவியல் திணைக்களம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவித்த பின்னர் இந்த கோபுரங்களை செயற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சுனாமி கோபுரங்களின் தொழில்நுட்ப செயல்திறன் குறித்து நிபுணர் குழு மூலம் பரிந்துரைகளை பெற்று எதிர்காலத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த திட்டங்களை தயாரித்து வருவதாக மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இதுவரை 14 கடலோர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 70,000 பேரின் தொலைபேசிகளுக்கு சுனாமி எச்சரிக்கை பற்றிய சமிக்ஞைகளை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், தொலைத்தொடர்பு ஆணைக்குழு, இந்நாட்டில் தொடர்பாடலை வழங்கும் தொலைபேசி வலையமைப்புகள் என்பனவற்றுடன் இணைந்து சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் குறுந்தகவல் மூலம் மக்களுக்கு அறிவிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய தொழில்நுட்பம் காரணமாக இலங்கை சுனாமி போன்ற அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க நன்கு தயாராக உள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவி விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அதற்கான ஒத்திகைகளை நடத்துவது மிகவும் முக்கியமானது என பேராசிரியர் அதுல சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here