மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 401 பேர் கைது.!

0
77

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போக்குவரத்து நடவடிக்கைக்கு அமைய திங்கட்கிழமை (30) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 401 பேர் உள்ளடங்களாக 8068 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய கடந்த 20 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (29) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 401 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய 53 சாரதிகள், அதிக வேகத்தில் வாகம் செலுத்திய 48 சாரதிகள், விதி மீறல்களில் ஈடபட்ட 1350 சாரதிகள், அனுமதிபத்திர உரிமை மீறல் தொடர்பில் 865 சாரதிகள் மற்றும் ஏனைய போக்குவரத்து விதிமீறல்களுடன் தொடர்புடைய 5,351 சாரதிகள் உள்ளடங்களாக 8,068 சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரத்துக்கு இடைப்பட்ட தொகையில் தண்டப்பணம் விதிக்கப்படுவதுடன் அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரம் 12 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும். மேலும் பொது போக்குவரத்து வாகன சாரதிகள் மேற்படி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படும் பட்சத்தில் அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என்பதையும் கவனத்தில் கொள்வதும் அவசியம்.

மது போதையில் வாகனத்தை செலுத்துவதை தவிர்க்குமாறு அனைத்து வாகன சாரதிகளிடமும் கோரிக்கை விடுக்கிறேன். மேலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மேற்படி விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here