பிங்கிரிய தொழிற்சாலை வளாகத்தில் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த இருவர் முகங்கொடுத்த சம்பவம் தொடர்பில் நேற்று (30) கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்கள் இருவரும் ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பதில் நீதவான் ஏ. சி. ஏ. சலாம் சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினம் சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க குளியாபிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு செய்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குருநாகல் பிங்கிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை வளாகத்தில் நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் பெர்னாண்டோ மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க ஆகியோர் நேற்று பிற்பகல் அங்கு சென்றிருந்தனர்.
குறித்த தொழிற்சாலை ஊழியர்களின் போக்குவரத்து வசதிகள் தொடர்பான பிரச்சனை குறித்து கலந்துரையாட அவர்கள் அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறாயினும், நிறுவனத்திற்குள் ஒரு மணி நேரம் நீடித்த கலந்துரையாடலுக்குப் பிறகு, வெளியே வந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொழிற்சாலை ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் ஒரு குழுவினர் கடுமையாக எதிர்ப்பை வௌிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.