மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல்போனதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், தேடப்பட்டு வந்த நபரின் சடலம் இன்று சனிக்கிழமை (04) முறிப்பு குளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
முறிப்புக் குளத்தின் தடுப்பு அணையில் அந்த நபரின் துவிச்சக்கரவண்டி மற்றும் செருப்பு ஆகியன கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முறிப்பு குளத்தில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – கோணாவில் மத்தியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் காணாமல் போனதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது கிளிநொச்சி முறிப்புக் குளத்தின் தடுப்பு அணையில், காணாமல்போன நபரின் துவிச்சக்கரவண்டியும் அவரது செருப்பும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த நபரை முறிப்பு குளத்தில் தேடும் பணிகள் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும் அவரது சடலம் மீட்கப்படவில்லை. இந்நிலையில் இன்று (04) அக்குளத்தில் மிதந்த நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சடலம் கொண்டுசெல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.