சீனாவில் குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்று ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2 கை குழந்தைகளுக்கு இந்த HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் ஒரு குழந்தைக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் மாநிலம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குஜராத், கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் சென்னையில் சேத்துப்பட்டு பகுதி தனியார் மருத்துவமனையிலும், கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் உள்ள 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இரு குழந்தைகளும் சளி, இருமல், காய்ச்சல் ஆகிய உடல்நல பாதிப்புகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அவசர ஆலோசனை ஒன்றை நடத்தியது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் மாவட்ட எல்லைகளில் மருத்துவ கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் HMPV தொற்று குறித்து யாரும் பயப்பட தேவையில்லை என்றும், பொதுவான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் இது நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ள குழந்தைகளிடம் மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டு இருப்பதாகவும் மருத்துவத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.