நேபாளம் – திபெத் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சீன எல்லைக்குள்பட்ட திபெத் – நேபாளம் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக் கோலில் 6.8 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 62 பேர் காயமடைந்துள்ளனர்.
சீனாவில் திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள ஜிகாஸில் உள்ள டிங்ரி கௌண்டியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் மற்றும் இந்தியாவின் தேசிய பூகம்ப மையம் ஆகியவை ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் சீனா ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகவே பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நேபாளத்தின் காத்மாண்டுவில், வலுவான நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கமானது, சீனாவில் திபெத் பகுதிகளான காவ்ரேபாலஞ்ச்வோக், சிந்துபாலஞ்சோக் தாடிங் மற்றும் சோலுகும்பு மாவட்டங்களிலும் உணரப்பட்டது. மேலும் இந்தியாவில் பிகார், தில்லி மற்றும் வட மாநிலங்களில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராக்களில் கட்டடங்கள், வீடுகள், சாலையோர மின்கம்பங்கள் குலுங்கும் விடியோ காட்சிகள் பதிவாகி இணையத்தில் வெளியாகியுள்ளன. கடந்த 2015ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 ஆயிரம் பேர் உயிரிழந்ததையடுத்து, நேபாள மக்களை அச்சுறுத்தும் வகையில் இந்த நிலநடுக்கம் வலுவாக இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.