இன்று (07) அதிகாலை கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்திருந்தனர்.
இன்று அதிகாலை 4.25 மணியளவில், கல்கிஸ்ஸ, வட்டரப்பல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்..
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள போதைப்பொருள் வியாபாரிகளான படோவிட்ட அசங்க மற்றும் கொஸ்மல்லி ஆகியோருக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாகவே இந்த இரட்டைக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வீட்டினுள் இருந்த மனோ எனப்படும் 36 வயதான சுதத் கோமஸ், 9mm ரக துப்பாக்கி மற்றும் கல்கடஸ் ரக துப்பாக்கியால் சுடப்பட்டதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 20 வயதுடைய சானக விமுக்தி என்ற சந்துன் என்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் தப்பியோடிய இரண்டு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் ஸ்தல விசாரணை இன்று காலை கல்கிஸ்ஸ நீதவான் சத்துரிகா சில்வாவினால் மேற்கொள்ளப்பட்டது.
கொல்லப்பட்ட இருவரும் போதைப்பொருள் வியாபாரி படோவிட்ட அசங்க என்பவருடன் தொடர்பில் இருந்தமையினால், கொஸ்மல்லியின் தரப்பினால் இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கொல்லப்பட்ட இருவரில் ஒருவரின் பாட்டி மற்றும் சகோதரன் ஒருவர் நேற்று (06) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னணியிலேயே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண தெற்கு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.