பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தங்களது தந்தையை எரித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
லாகூரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முகல் சோக் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
காவல்துறையினர் கூறுவதன்படி, 48 வயதான அலி அக்பர் என்ற நபர் 3 திருமணங்கள் செய்துள்ளார். அவருக்கு 10 குழந்தைகள் உள்ளனர். அவரது முதல் மனைவி இறந்த நிலையில், இரண்டு மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் வசித்துவருகிறார்.
பி.டி.ஐ. செய்தி முகமை கூறுவதன்படி, கடந்த ஜனவரி 6-ம் தேதி அக்பர் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது 12 மற்றும் 15 வயதான இரு மகள்கள் அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
பலத்த தீக்காயத்தால் அவதிப்பட்ட அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
மகள்கள் இருவரும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். அவர்களை அலி அக்பர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறியிருக்கின்றனர்.
“அவர் எங்களை பாலியல் ரீதியாக கொடுமைபடுத்தியதால் நாங்கள் இருவரும் அவரைக் கொலை செய்ய திட்டமிட்டோம். அவரது வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து அவர் மீது தெளித்து நெருப்பைப் பற்ற வைத்தோம்” எனக் கூறியுள்ளனர்.
கொலை வழக்கு பதியும் முன் இறந்த நபரின் இரண்டு மனைவிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.