கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஜலஹள்ளி கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கங்கா ராஜு (42). பெங்களூரு மாவட்ட காவல்துறையின் ஹெப்பக்கொடி காவல் நிலையத்தில் ஊர்க்காவல்படை வீரராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், தனது 36 வயது மனைவி, மகள் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கங்கா ராஜு தனது மனைவி பாக்யா, மகள் நவ்யா (19) மற்றும் அவரது மனைவியின் சகோதரியின் மகள் ஹேமாவதி (23) ஆகியோரை வெட்டிக் கொன்றார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்தக் கொலைக்குப் பின்னால் தகாத உறவு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது, ராஜுவின் மனைவி வேறு ஒருவருடன் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கங்கா ராஜு மீது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பெங்களூருவில் தற்கொலை மற்றும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.