இந்தியா – புனே எரவாடாவில் உள்ள கால் சென்டரில் பணிபுரிந்து வந்தவர் சுபதா(28). இவர் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் கிருஷ்ணா என்பவரிடம் அடிக்கடி பணம் கடன் வாங்கி இருக்கிறார். இப்பணத்தை கிருஷ்ணா கேட்டபோது கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். சுபதா நேற்று வேலை முடிந்து வந்தபோது வாகனங்களை நிறுத்தும் இடத்தில் சுபதாவை கிருஷ்ணா வழிமறித்து தான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் சுபதா கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனை அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென கிருஷ்ணா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுபதாவை குத்தினார். அதனை சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்த 20க்கும் மேற்பட்டோர் கொலையை தடுக்க முன்வரவில்லை.
சிலர் அக்காரியத்தை தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். கத்தியால் குத்திவிட்டு அப்பெண்ணை கீழே பிடித்து தள்ளினார். அப்பெண் கீழே விழுந்த பிறகுதான் சுற்றி நின்றவர்கள் கிருஷ்ணாவை சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கத்தியால் குத்தப்பட்ட சுபதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இக்கொலைக்கான காரணம் குறித்து கிருஷ்ணாவிடம் போலீஸார் விசாரித்தபோது, சுபதா அடிக்கடி தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பணம் வாங்கி இருக்கிறார். ஆனால் பணத்தை ஒருபோதும் திரும்ப கொடுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் பணத்தை திரும்ப கேட்கும்போது தனது தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி பணம் கொடுக்க மறுத்தார்.
இதையடுத்து உண்மை நிலையை தெரிந்து கொள்ள கிருஷ்ணா சுபதாவின் ஊருக்கு சென்றார். அங்கு சுபதாவின் தந்தைக்கு எந்த வித பிரச்னையும் இல்லை. அவர் ஆரோக்கியமாக இருந்தார். அதன் பிறகுதான் தனது பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டு கிருஷ்ணா சுபதாவிடம் சண்டையிட்டுள்ளார். அச்சண்டையில் சுபதாவை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. இக்கொலை குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் அஜித்பவார் புனேயில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு மூத்த போலீஸ் அதிகாரிகள் சரியாக வேலை செய்யாததுதான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
Stabbing,& murder of a young woman and crowds of onlookers; This video of the murder in Yerwada (pune)has gone viral.. pic.twitter.com/vrzFNlGHSy
— Krishna Kant Mishra (@KKMishraOffice) January 9, 2025