வடக்கு கிழக்கில் 16 ஆம் திகதி வரை மழை தொடரும்; வெளியான அறிவிப்பு..!

0
39

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கிடைக்கும் மழை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் இன்று (11) மதியம் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வங்காள விரிகுடாவில் கடந்த 07 ஆம் திகதி அன்று உருவாகிய காற்றுச் சுழற்சியின் நகர்வு வேகம் மிக மிக குறைவாகவே உள்ளது.

இதன் காரணமாக மழை நாட்கள் நீடிக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே,தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.

கடந்த சில நாட்களாக குறிப்பாக 07ஆம் திகதி யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி, 08 ஆம் திகதி முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை,9 ஆம் திகதி அம்பாறை மற்றும் மட்டக்களப்பு 10 ஆம் திகதி வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு கிடைத்த மழை, இன்று மாலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலடையும்.

அதேவேளை மீண்டும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே அறுவடைச் செயற்பாடுகளில் ஈடுபடும் விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நாட்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவது சிறந்தது.

வடக்கு, கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு கடற்பகுதிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here