மதுரையில் எஸ்.எஸ்.ஐ ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் கார்த்திகை தீப விழாவிற்காக, பல்வேறு இடங்களிலிருந்து போலீசார் பாதுகாப்பிற்காக கூடுதலாக பணியமர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில், மதுரை திடீர் நகர் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ ஜெயபாண்டி, பாதுகாப்பு பணிக்காக திருப்பரங்குன்றத்திற்கு சென்றுள்ளார். அங்கு, 14 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வந்துள்ளார். இதனிடையே, சிறுமி கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைக்கு தனியாக சென்ற போது, எஸ்.எஸ்.ஐ ஜெயபாண்டி, சிறுமியை பின் தொடர்ந்து சென்று, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கழிவறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் தங்களின் மகள் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், கழிவறைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சிறுமி, மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் திகைத்துப்போன பெற்றோர், உடனடியாக மதுரை மாவட்ட சைல்ட் லைனில் புகார் அளித்தனர்.
புகாரைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரும், சைல்ட் லைன் அலுவலர்களும் சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பாலியல் குற்றத்தை செய்தது எஸ்.எஸ்.ஐ ஜெயபாண்டி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் ஜெயபாண்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போலீஸ் எஸ்.எஸ்.ஐ, கோயிலுக்கு வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.