உக்ரைனிடம் சிக்கினால் தற்கொலை செய்து கொள்ளுங்கள்.. வடகொரிய வீரர்களுக்கு அதிரடி உத்தரவு.!

0
16

உக்ரைன் இடையேயான போர் இப்போது தீவிரமடைந்துள்ள சூழலில், ரஷ்யாவுக்காக சுமார் 10,000 வடகொரிய வீரர்கள் போரிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, உக்ரைன் வசம் சிக்கும் சூழல் ஏற்பட்டால், தற்கொலை செய்து கொள்ளுமாறு வடகொரிய வீரர்களுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்தாலும் கூட இடையில் சில காலம் பெரியளவில் எந்தவொரு தாக்குதலும் இல்லாமலேயே இருந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு எல்லைத் தாண்டி தாக்கும் தங்களின் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தலாம் என்று மேற்குலக நாடுகள் அனுமதி வழங்கிய நிலையில், நிலைமை மொத்தமாக மாறியது. உக்ரைன் ஒரு பக்கம் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவும் கடுமையான பதிலடிகளைக் கொடுத்து வருகிறது.

ரஷ்யாவுக்காக வடகொரிய வீரர்களும் கூட போரில் இறங்கியுள்ளது பகீர் கிளப்பியது. ஏனென்றால், வடகொரியா உலகின் மற்ற நாடுகளில் இருந்து தனித்துவிடப்பட்டு இருக்கிறது. வடகொரியாவுக்கு ரஷ்யாவுடன் மட்டும் எப்போதும் நல்லுறவு இருந்துள்ளது. தேவையான நேரத்தில் உக்ரைனுக்கு பல நல்லுதவிகளை ரஷ்யா செய்திருக்கிறது. சுமார் 10,000 வட கொரிய வீரர்கள் ரஷ்யாவுக்காகப் போரிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இருப்பினும், முறையான போர்ப் பயிற்சி இல்லாததால் வடகொரிய வீரர்கள் அதிகம் திணறி வருகின்றனர். இந்நிலையில் தான், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சார்பில் போராடும் வடகொரிய வீரர்களுக்கு அந்நாட்டு அரசு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ரஷ்யாவுக்காகச் சண்டை போடும் வட கொரிய வீரர்களை உக்ரைன் சுற்றி வளைத்தால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று வடகொரிய அரசு உத்தரவிட்டுள்ளதாம். உக்ரைன் வீரர்களிடம் உயிருடன் சிக்கினால் தேவையில்லாத பிரச்சனை என்பதாலேயே வடகொரிய அரசு இப்படியொரு உத்தரவைப் போட்டுள்ளதாம். தென்கொரியாவின் உளவு அமைப்பு சார்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உளவு அமைப்பின் தகவல்களை மேற்கோள்காட்டிய தென்கொரிய எம்பி லீ சியோங்-குவ்ன், “போரில் இறந்து கிடந்த வீரர்களை உக்ரைன் ஆய்வு செய்துள்ளது. அதில், வடகொரிய வீரர்களிடம் இதுபோல குறிப்புகள் இருந்தது தெரியவந்துள்ளது. உக்ரைன் வீரர்கள் சுற்றி வளைத்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அல்லது தற்கொலைப் படையைப் போல வெடிகுண்டை வெடிக்கச் செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here