கண்டி, வத்தேகம நகரில் மீன் வியாபாரி ஒருவர் கடந்த 3 ஆம் திகதி அவரது வீட்டிற்கு முன்பாக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று சந்தேக நபர்களுடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நான்கு வாள்களும், மூன்று லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மாத்தளை பிரிவு குற்றப்பிரிவு பொலிசார் இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.
கொலை செய்யப்பட்ட மீன் வியாபாரியின் கடைக்கு அடுத்துள்ள கடையில் உள்ள மீன் வியாபாரியால், குறித்த மீன் வியாபாரியை கொலை செய்ய 2 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும், அதன்படியே கொலை செய்யப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாத்தளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்ட விசாரணையின் போது, சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் காலி கரந்தெனிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டனர்.
விசாரணையின் போது, மற்றைய சந்தேக நபர் காலி அம்பலங்கொடையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணையின் போது, கொழும்பின் தலங்கம பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு வாள்களை பொலிசார் கண்டுபிடித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டு வருகிறது.