வட மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

0
63

கடந்த 07.01.2025 அன்று உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது மாத்தறைக்கு தென் மேற்கு திசையில் 380 கி.மீ. தூரத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் வேறுபட்ட அளவுகளிலான மழை தொடரும். அந்த வகையில்;

1. 15.01.2025 காலை மழை சற்று குறைவாக காணப்படும். ஆனால் மதியத்துக்கு பின்னர் வடக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும். ஆனால் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும்.

2. 16.01.2025 வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சிறிய அளவில் மழை கிடைக்கும். ஆனால் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும்.

3. 17.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் மிகச் சிறிய அளவில் மழை கிடைக்கும்.
( மேலுள்ள 02 நாட்களும்(16/17) போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அறுவடை செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். ஆனாலும் சிறிய அளவிலேனும் மழை கிடைக்கும் என்பதனை கருத்தில் கொள்க.)

17.01.2025 அன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால்…

1. 18.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

2. 19.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும்.

3. 20.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும்.

4. 21.01.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும்.

அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயப் பெருமக்களே… நீங்கள் அறுவடையைத் திட்டமிட வேண்டும் என்பதற்காகவே மழை தொடர்பான எதிர்வுகூறலை விரிவாக தந்துள்ளேன்.
ஆனாலும் உங்கள் நிலைமைக்காக மனம் வருந்துகின்றேன். நீங்கள் விதைத்த பொழுது பெங்கால் புயல் பாதிப்பை ஏற்படுத்தியது. அதில் எஞ்சியவற்றை அறுவடை செய்யவிடாமல் தற்போது மழை கிடைத்து வருகின்றது.

தற்போது இரணைமடுக்குளத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. கல்மடுக்குளம் வான் பாய்கின்றது. வவுனிக்குளம் இன்று இரவு அல்லது நாளை காலை வான் பாயும். தண்ணி முறிப்பு மற்றும் முத்தையன் கட்டு குளங்களின் வான் கதவுகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்கு முற்றிய நெற்கதிர்கள் உள்ள வயலுக்கு மிதமான மழை கிடைத்தாலே மிகப் பெரிய பாதிப்புக்கள் ஏற்படும்.

இதில் மேலும் கவலையான விடயம் யாதெனில் ஜனவரி மாதம் முடிவதற்கிடையில் இன்னமும் இரண்டு காற்றுச் சுழற்சிகள் உருவாகும் வாய்ப்புள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பில் இனியும் நாம் அசட்டையாக இருக்க முடியாது. துறை சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து மாற்று வழிகள் பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது. என நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here