கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கொலை செய்த வழக்கில் பெண்மணி உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த ஜான் ஸ்டீபன் ஜோதிடம் பார்த்து வந்தார். கடந்த 8-ஆம் தேதி இவரது மனைவி விஜயகுமாரி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, ஜான் ஸ்டீபன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வில் ஜான் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதைத்தொடர்ந்து ஜான் ஸ்டீபன் கொலை வழக்கில் கட்டிமாங்காடு பகுதியைச் சேர்ந்த கலையரசி மற்றும் நெல்லை கருங்குளத்தை சேர்ந்த நம்பிராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், கலையரசி பிரிந்துபோன தனது கணவருடன் சேர்ந்து வாழ ஜோதிடர் ஸ்டீபனை அணுகியுள்ளார். அவர் கூறிய பரிகாரத்தை செய்த பிறகும் கணவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்று தெரிகிறது.
மேலும், தான் கட்டணமாக செலுத்திய ஒன்பதரை லட்சம் ரூபாயை ஸ்டீபன் திருப்பித் தர மறுத்ததால் முகநூல் மூலம் பழகிய நம்பிராஜனுடன் சேர்ந்து ஸ்டீபனை, துணியால் கழுத்தை இறுக்கியும், தரையில் அடித்தும் கொலை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கலையரசி மற்றும் நம்பிராஜனை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். (பிரதி)