யாழ்ப்பாணத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3 மில்லியன் ரூபாய் பணத்தை மிரட்டிப் பறித்ததற்காக இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த இரண்டு சிப்பாய்கள் மற்றும் காப்புறுதி நிறுவனமொன்றின் மாவட்ட முகாமையாளருடன் மேலும் ஒருவர் உட்பட மொத்தமாக நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 39 – 50 வயதுக்குட்பட்ட மஹய்யாவ, கட்டுகஸ்தோட்டை, பத்தேகம மற்றும் மணிக்கின்ன ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்.
திருடப்பட்ட பணத்திலிருந்து 2 மில்லியன் ரூபா தொகையை சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக லங்காதீப பத்திரிகை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக் கடைக்குள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் எனக் கூறி சந்தேகநபர்கள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளால் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் குறித்த கடை உரிமையாளரிடம் இருப்பதாக அவர்கள் போலி பிடியாணையை முன்வைத்து குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன், நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்காக தங்கம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் எனக் கூறி உரிமையாளரை வற்புறுத்தி ரூ. 3 மில்லியன் ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.