சாலை விபத்தில் உயிரிழந்த தனது கணவரின் இறுதிச் சடங்கில் கூட கலந்துகொள்ள தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக யூடியூபர் ராகுலின் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈரோட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ராகுல் டிக்கி கடந்த வியாழக்கிழமை வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
சமூக வலைத்தளங்கள் மூலமாக பலர் தங்களுடைய திறமையை வெளி உலகத்திற்கு காட்டி பிரபலமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் யூடியூப் மூலமாக பிரபலமானவர்தான் ராகுல் டிக்கி. இவர் பெண்களைப் போல மேனரிசம் காட்டி பல வீடியோக்களை போட்டு இருக்கிறார்.
அதுபோல தற்போது ட்ரெண்டிங்கில் என்ன விஷயம் போய்க் கொண்டிருக்கிறதோ அது சம்பந்தமாக வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். ஆனால் நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் பைக்கில் போகும்போது சாலையில் சென்டர் மீடியனில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இந்த செய்தி நேற்று காலை வெளியானதை தொடர்ந்து அவருடைய பாலோவர்ஸ் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவருடைய மனைவி இன்று செய்தியாளர்களை சந்தித்து பல தகவல்களை தெரிவித்து இருக்கிறார். அதில் தனக்கு ராகுல் டிக்கியோடு இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் பழக்கமானார்.
அதற்கு பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டு திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. ராகுலுக்கு 27 வயது, எனக்கு 21 வயது. ராகுலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஆறு மாதத்தில் விவாகரத்து ஆகிவிட்டது. அந்த விஷயம் எனக்கு ஆரம்பத்தில் தெரியாது. திருமணத்திற்கு பிறகு தான் தெரிய வந்தது.
ஆரம்பத்தில் என் கணவர் நன்றாக தான் இருந்தார். ஆனால் அவர் வேலைக்கு போயிட்டு வந்து உடம்பு வலியா இருக்கு என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு குடிக்க போறேன் என்று சொல்லும் போது அவருடைய அம்மா அதை தடுக்கவில்லை. அதனால் அவர் குடி பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். ஒரு கட்டத்தில் அதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட தொடங்கிவிட்டது. அப்போது நீங்கள் தனியாக இருந்தால்தான் குடும்பத்தை புரிந்து கொள்ள முடியும் என்று என்னுடைய மாமியார் எங்களை தனியாக போக சொன்னார். நாங்களும் கோவிலில் குறி கேட்டு விட்டு தனியாக வந்தோம். அதற்குப் பிறகு எங்களுக்குள் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது.
அவருக்கு நடிக்க வேண்டும், படத்தில் வர வேண்டும் என்று ரொம்ப ஆசை இருந்தது. எனக்கு மட்டும் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லையே.. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது என்று புலம்பி கொண்டு இருப்பார். மத்தபடி என்னை நன்றாகத் தான் பார்த்துக் கொண்டார். ஆனால் இப்போது அவர் இறந்து போனதும் அவருடைய குடும்பத்தினர் எல்லோரும் என் மீது தான் தப்பு என்று பேசுகிறார்கள்.
எல்லோருமே என்னை ஒதுக்கி வைத்து விட்டார்கள். என் புருஷன் முகத்தை கூட கடைசியா என்னை பார்க்க விடல. என்னுடைய மாமனார் ஹிந்து, என்னுடைய மாமியார் முஸ்லிம். அதனால் என்னுடைய கணவர் இறந்ததும் உடலை மசூதிக்கு எடுத்துட்டு போயிட்டாங்க. அங்க உள்ள முறைப்படி யாரும் அழக்கூடாது, தொட்டு கூட கும்பிடக்கூடாது. நான் ஒன்றரை வருஷம் காதலிச்சு வாழ்ந்துட்டு எப்படி தொட்டு கும்பிடாமல் இருக்க முடியும்? ஆனால் என்னை ஒதுக்கி வச்சு அடக்கம் பண்ணிட்டாங்க.
இந்நிலையில், தற்போது ராகுலின் செல்போன், பரிசுப் பொருட்களை கேட்டு அவரது உறவினர்கள் மிரட்டுவதாகவும் தேவிகா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ராகுலின் குடும்பத்தினர் தன்னை மகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தேவிகா உருக்கமாக கேட்டுக்கொண்டார்.