மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், துப்பாக்கித்தாரியும், அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில், இருவர் பலியாகினர். இருவர் காயமடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி, கொழும்பு-05, நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் பணியாற்றுவர் என்றும், ஒத்துழைப்பு வழங்கிய இருவரில் ஒருவர், இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
இதேவேளை, 2023 ஆகஸ்ட் 24 ஆம் திகதியன்று அடம்பன் பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு இருவர் பலியாவதற்கு காரணமாக இருந்தவர் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இரு குழுக்களுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவும் முரண்பாடு காரணமாக, பணத்தை குத்தகைக்கு பெற்று வியாழக்கிழமை (16) அன்று துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் என்பதும் விசாரணைகள் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.