மஹவ பொலிஸ் பிரிவில் நிகவெரட்டிய சியம்பலங்காமுவ வீதியில் தலாகொலவெவ பஸ் நிலையத்திற்கு அருகில், நேற்று சனிக்கிழமை (18) மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள், இப்பலோகமவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22, 31 வயதுடைய சகோதரனும் சகோதரியும் ஆவர்.
மஹவ பகுதியிலிருந்து நிகவெரட்டிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடது பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து மஹவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
இருவரது சடலங்களும் மஹவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.