“மரணப்படுக்கையிலும் காதலியை காட்டிக்கொடுக்காத காதலன்”.. என்ன நடந்தது..?

0
3

கேரளாவில் காதலனுக்கு ஜூஸில் விஷம் கொடுத்து கொலை செய்த பெண்ணுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பில் சில விஷயங்களையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பாறசாலை மூறியன்கரையைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன்ராஜ் பி.எஸ்.சி. ரேடியாலஜி படித்து வந்தார். இவருக்கும் களியக்காவிளை அருகே ராமவர்மன் சிறையைச் சேர்ந்த கிரீஷ்மா என்பவருக்கும் காதல் இருந்து வந்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி கிரீஷ்மா வீட்டிற்கு தனது நண்பருடன் ஷாரோன்ராஜ் சென்றுள்ளார். நண்பர் வெளியே நின்று கொண்டிருக்க ஷாரோன் மட்டும் காதலியின் வீட்டுக்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ஷாரோன், நண்பருடன் சேர்ந்து வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அப்போது கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காதலி கிரீஷ்மா வீட்டில் கசாயம் மற்றும் குளிர்பானம் குடித்ததாகவும் அதில் இருந்துதான் வயிறு வலிக்கத் தொடங்கியதாகவும் அவர் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷாரோனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி அவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் ஷாரோன்ராஜுக்கு எடுத்த ரத்த மாதிரிகளில் அவருடைய ரத்தத்தில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது.

அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரீஷ்மாவை கைது செய்தனர். அவரும் கிருமிநாசினி குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை போலீசார் காப்பாற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கிரீஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதால், ஷாரோன் ராஜ் அந்த திருமணத்தை நிறுத்த அவருடன் ஊர் சுற்றிய போட்டோக்கள், வீடியோக்களை புது மாப்பிள்ளையிடம் காட்டிவிடுவாரோ என்ற அச்சத்தில் திட்டமிட்டு அவரைக் கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் கிரீஷ்மா குற்றவாளி என உறுதிப்படுத்திய கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதேநேரம், தீர்ப்பில் சில விஷயங்களையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

அதில், “ஷாரோன் ராஜை மட்டுமல்ல, காதலின் உணர்வையும் சேர்த்தே கிரீஷ்மா கொலை செய்துள்ளார். கிரீஷ்மா மீதான காதலுக்கு அடிமையாக இருந்த ஷாரோன் ராஜ், 11 நாட்கள் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் மரணப்படுக்கையில் இருந்தபோதும் காதலியைக் காட்டிக்கொடுக்கவில்லை.

துரோகத்தை எதிர்கொண்டாலும், மரணப் படுக்கையிலும் கிரீஷ்மாவை ஷாரோன் ராஜ் நேசித்துள்ளார். பெரும் துரோகத்தை இழைத்துள்ள கிரீஷ்மாவுக்கு தண்டனை அளிப்பதில் இருந்து, அவரின் வயதையோ, அவருக்கு குற்றப் பின்னணி இல்லை என்பதையோ கருத்தில் கொள்ள முடியாது. கிரீஷ்மா ஷரோனுக்கு விஷம் கொடுத்தது, எந்தவித தூண்டுதலும் இல்லாமல் நடந்தவை.” என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here