ஒரே நாளில் 7 கோள்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வு அரங்கேற உள்ளது. எதிர்வருகின்ற பெப்ரவரி 26ஆம் திகதி, இரவு வானில் ஏற்கனவே காட்சி தரும் 6 கோள்களுடன் புதன் கோளும் இணையும். ஏழு கிரகங்களின் அபூர்வ காட்சியை வானியல் ஆர்வலர்கள் அன்று கண்டுகளிக்கலாம்.
இந்த ஜனவரி மற்றும் பெபிப்ரவரி மாதங்களில் தெளிவான இரவு நேரத்தில் வானத்தை பார்த்தால் ஒரு விருந்து காத்திருக்கும். வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என ஆறு கோள்களும் தற்போது இரவு வானில் காட்சியளிக்கின்றன. பெப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் ஒரே ஒரு இரவு மட்டும் அவற்றுடன் புதனும் இணைந்து ஏழு கிரகங்களின் வரிசை வானில் காட்சி தரும்.
இது வானியல் ஆர்வலர்களுக்கு மட்டுமான காட்சி அல்ல. இது சூரிய மண்டலம் குறித்த புதிய புரிதல்களையும் தரும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
சூரிய குடும்பத்தின் முக்கிய 8 கோள்களும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருகின்றன. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கோளானது, 88 நாட்களில் ஒரு சுற்றை நிறைவு செய்கிறது. அதாவது புதன் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 88 நாட்கள். பூமியின் ஆண்டு 365 நாட்கள். அதிகபட்சமாக நெப்டியூன் சூரியனை சுற்றிவர 60,190 நாட்கள், அதாவது சுமார் 165 ஆண்டுகள் ஆகும்.