ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்த தீர்மானிக்கவில்லை – அரசு அறிவிப்பு..!

0
11

நாட்டில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதற்கான தீர்மானம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்வைத்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த ரோஹிங்கியா அகதிகள் அனைவரும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இனவாத ரீதியில் குழப்பம் விளைவிக்கும் நோக்கில் குறித்த பிரேரணையை முன்வைக்கவில்லை எனவும், பிரதி அமைச்சர் இந்த பிரேரணையை திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பனர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், தஞ்சமடைதல் சட்டவிரோதமான நடவடிக்கை அல்ல எனவும், அதனை ஏற்றுக்கொள்ளுமாறும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

தாம் அரசாங்கத்தை குற்றம் சுமத்தவில்லை எனவும், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளே தஞ்சமடைவோரை மீள அனுப்பிவைப்பதாகவும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், நாட்டில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அரசாங்கம் என்ற வகையில் அனுமதியற்ற பிரவேசம் தொடர்பில் நாட்டின் சட்ட நடைமுறைக்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here