சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் ஒரு சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
தம்புத்தேகம பொலிஸ் பிரிவில், அனுராதபுரம்-பாதெனிய பிரதான வீதியில் உள்ள கோன்வெவ பகுதியில், மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காக சந்தேக நபர், மோட்டார் சைக்கிளுடன், தம்புத்தேகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருநாகல், அஸ்வெத்தும பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் நேற்று (24) அனுராதபுரம் பொலிஸ் பிரிவில் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.
மேலும், இந்த சந்தேக நபர் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குருநாகல் பொலிஸ் நிலையத்தால் கைது செய்யப்பட்டு, குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாகவும்,
அவருக்கு ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சிறை அதிகாரிகளிடமிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளமையும், சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.