கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு பிடித்து சென்றது.
ஓராண்டை கடந்து காசாவில் நடந்து வரும் மோதலில் பாலஸ்தீனியர்களில் 46,900 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 700 பேர் காயமடைந்து உள்ளனர் என்றும் காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து போரை முடிவுக்கு கொண்டு வந்தனர்.அதற்க்குஇஸ்ரேல் மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
இதனால், பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டு உள்ள இஸ்ரேல் மக்களை பாதுகாப்பாக விடுவிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவர்களில் 3-ல் ஒரு பகுதியினர் உயிரிழந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது.
கடந்த 19-ந்தேதி முதல் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடங்கியதையடுத்து பிடித்து வைத்துள்ள கைதிகளை பரஸ்பரம் விடுவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன்படி, காசாவில் இருந்து, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் பணய கைதிகளில் 33 பேர் விடுவிக்கப்பட உள்ளனர்.
முதல்கட்டத்தில் இஸ்ரேல் மக்கள் 3 பேர் கடந்த ஞாயிற்று கிழமை விடுவிக்கப்பட்டநிலையில், 2-ம் கட்டத்தில் இஸ்ரேல் பணய கைதிகளில் கரீனா அரிவ், டேனியலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய 4 பேர் விடுவிக்கப்பட உள்ளனர் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்தநிலையில் இவர்கள் 4 பேரும் இஸ்ரேல் ராணுவ வீராங்கனைகள் ஆவர். இதற்கு ஈடாக 200 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர் என்றும் இதன்படி, இன்று (சனிக்கிழமை) மதியம் பரஸ்பரம் இவர்களை விடுவிக்கும் நிகழ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.