ஆட்டை கடித்ததாக கூறி நாய் கொலை.. முல்லைத்தீவு சட்டத்தரணி ஒருவர் கூறும் செய்தி.!

0
37

ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில் நடந்த ஒரு பிணக்கு தொடர்பில் தற்போது பலரும் பேசப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவம் குறித்து முல்லைத்தீவு சட்டத்தரணி ஒருவர் கூறுகையில்…

முல்லைத்தீவு மாங்குளம் மதவைக்குளம் பகுதியில் உள்ள ஒரு நபர் வளர்த்த நாய் அவருடைய வீட்டின் அயலில் உள்ள வீட்டு உரிமையாளரின் ஆட்டை கடித்து ஆடு இறந்துவிட்டது தொடர்பில் முறைப்பாடு பொலிஸ் நிலையத்தில் கிடைத்ததை தொடர்ந்து குறித்த முறைப்பாடு அங்கு இணக்கம் காணமுடியாத நிலையில் இணக்க சபைக்கு பரிந்துரைக்க பட்டு உள்ளது. அங்கு நாயின் உரிமையாளர் இறந்த ஆட்டிற்கு நஷ்ட ஈடு கொடுக்க முடியாதா வறிய நிலையில் இருந்த படியாலும் ஆட்டின் உரிமையாளர் குறித்த நாயை தன்னிடம் தருமாறு கேட்டதன் அடிப்படையிலும் இணக்க சபையினால் நாயை அதன் உரிமையாளரிடம் இருந்து பெற்று ஆட்டின் உரிமையாளரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.

கொடுத்து ஒன்றரை மணி நேரத்திலேயே ஆட்டின் உரிமையாளரால் நாயின் கழுத்தில் இருந்து கயிறு இறுகச் செய்யும் வகையில் நடந்து இறுகச் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கின்றது என்பது புலனாகின்றது.

ஒரு நாய் உரிமையாளரால் தனது வீட்டில் கட்டி வளர்க்கப்படுகின்ற போது அது அதன் வீட்டை விட்டு வெளியில் வந்து வேறு நபருக்கோ, சொத்துக்கோ, விலங்குகளுக்கோ சேதம் விளைவித்தால் Pauperian Action யின்படி நாயின் உரிமையாளர் ஆட்டின் உரிமையாளருக்கு ஏற்பட்ட முழுத் தொகையும் நஷ்டஈடாக கொடுக்க வேண்டும். அல்லது அந்த நாயை ஆட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க (Noxal Surrender) வேண்டும் என்பது சட்டம் இது Roman Dutch சட்டம். இந்த சட்டம் நடைமுறையில் இருந்த காலம் சட்டரீதியாக மனிதர்கள் விலங்குகளை அடிமையாக வைத்திருக்க கூடிய காலம். ஆனால் அந்த சட்டம் தற்போது எமது நாட்டில் நடைமுறையில் இல்லை.

இங்கு பல விடயம் புலனாகின்றது…

1. நாயின் உரிமையாளர் அதனை கட்டி வளர்த்து இருக்கின்றார்.
2. ஆட்டின் உரிமையாளர் கட்டாமல் வளர்த்து இருக்கின்றார்.
3. ஆடு நாயை தேடிச் சென்று தான் கடிபட்டு இறந்து இருக்கின்றது.
4. நாயின் உரிமையாளருக்கு ஆட்டை கொலை செய்ய வேண்டும் என்ற குற்ற எண்ணம் இருந்திருக்கவில்லை.
5. ஆட்டின் உரிமையாளர் நாயை கொலை செய்ய பலதடவை முயற்சித்து இருக்கின்றார்.
6. நாயின் உரிமையாளரிடம் நஷ்ட ஈடு கொடுக்கும் எண்ணம் இருந்து இருக்கிறது ஆனால் அதற்கான தகுதி இருந்து இருக்கவில்லை.
7. ஆட்டின் உரிமையாளர் நயின் உரிமையாளரின் உரிமையாளரின் வறுமையையும் தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.

இங்கு ஆட்டின் உரிமையாளர் இணக்க சபையை பிழையாக வழிநடத்தி இருக்கின்றார். இணக்க சபை உறுப்பினர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட்டு அந்த நாய் கொலை செய்யப்படும் என்று தெரிந்து இருந்தும் அந்த நாயை கொலை செய்யும் எண்ணத்துடன் இருந்த ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்து இருக்கின்றனர். ஆட்டின் உரிமையாளர் அந்த நாயை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் சுருக்கு (சுருக்கு போடுவதன் நோக்கம் இற்குவதற்கு) போடப்பட்டு கயிற்றை கழுத்தில் கட்டி அதன் நுனியை மரத்தின் மேல்பகுதியில் கட்டி நாயை தொங்கவிட்டு அதனை கொலை செய்து இருக்கின்றார்.

நாய் ஆட்டை கடித்தது கொலை செய்யும் (Intention for Killing) நோக்கத்தில் என்று நிரூபிக்க முடியாது. இவ்வாறு இருக்கையில் ஆட்டின் உரிமையாளர் நாயை பெற்றுச் சென்றது கொலை செய்யும் நோக்கத்தில் (Intention for Killing) அதற்கு வழி வகுத்து உடந்தையாக இருந்தது இணக்க சபை உறுப்பினர்கள். இவர்கள் 1907 ஆம் ஆண்டின் 13 இலக்க (Cruality to Animal) மிருகவதைச் சட்டத்தின் பிரிவு 04 இன் கீழ் தண்டிக்க படவேண்டிய குற்றம் புரிந்ததுள்ளதாக நான் கருதுகின்றேன்.

ஆக இங்கு ஒரு மிருக கொலை நடக்காமலே மிருக இறப்பிற்கு பதில் மிருக கொலை நடந்து இருக்கின்றது.

இது சாதாரண நாய் தானே என்று விட்டு விடலாம். இதே நிலை தான் மனிதருக்கு ஏற்பட்டாலும் இவர்களைப் போன்ற மனிதர்களும் இதே போன்ற இணக்க சபை உறுப்பினர்களும் நடந்து கொள்வார்கள் என்ற ஒரு பயம் தான்.

குறிப்பு: இப்போ அந்த நாயின் உரிமையாளர் குறித்த இணக்க சபைக்கு சென்று குறித்த பெண் தன்னுடைய நாயை கொன்று விட்டார் என்று ஒரு முறைப்பாடு கொடுத்தால் குறித்த இணக்கசபை உறுப்பினர்கள் அந்த பெண்ணை சுருக்கு போட்டு கயிற்றில் கட்டி நாயின் உரிமையாளரிடம் கொடுத்து விடுவார்களோ என்று பயமாக இருக்கின்றது.
(சட்டத்தரணி – குமாரசிங்கம் கம்ஷன்)

கீழே இணைக்கப்பட்ட இந்த வீடியோவில் பாதிக்கப்பட்டவர்கள் கருத்து கூறியுள்ளார்கள், Video – eyetamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here