ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், அனக்கா பள்ளியில் 17 வயதான சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த சந்து என்பவரை காதலித்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை கண்டித்து அவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால், சிறுமி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேறி சந்துவை திருமணமும் செய்துள்ளார்.
பின்னர் இருவரும், பெத்தாபுரத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வசித்துள்ளனர். இதனிடையே, வீட்டில் தங்களின் மகள் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர்களின் மகள் கிடைக்காததால், சந்தேகம் அடைந்த பெற்றோர் இது குறித்து உடனடியாக அனக்கா பள்ளி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இறுதியில், சிறுமி பெத்தாபுரத்தில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார், அங்கு சென்று சிறுமியை மீட்டனர். மேலும், மைனர் பெண்ணை திருமணம் செய்தகுற்றத்திற்காக போலீசார் சந்துவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து, போலீசார் சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்றுள்ளனர்.
ஆனால் சிறுமியின் பெற்றோர், தங்கள் மகளை ஏற்க மறுத்து விட்டனர். இதனால் சிறுமியின் மாமியாரான, சந்துவின் அம்மா நீலிமாவிடம் சிறுமியை ஒப்படைத்தனர். ஆனால் சிறுமியின் மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து, சிறுமியை வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். மேலும், சிறுமிக்கு அடிக்கடி மயக்க மாத்திரைகளை கொடுத்தும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.
இதனால், சிறுமி ஒரு கட்டத்தில் சுய நினைவை இழந்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர், தங்களின் மகளை மீட்டு, விசாகப்பட்டினம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிறுமியின் உடல் நிலை சற்று முன்னேறிய நிலையில், சிறுமி தனக்கு நடந்ததை எல்லாம் போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியார் நீலிமா மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.