இலஞ்சம் பெற்ற மோட்டார் போக்குவரத்து திணைக்கள பிரதி ஆணையாளர் கைது.!

0
78

சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தின் உரிமம் மாற்றத்திற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) பிரதி ஆணையாளர் ஒருவர் நேற்று (5) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட துணை ஆணையாளர் ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஹம்பாந்தோட்டை அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டு தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மீது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடத்திவந்த தொடர்ச்சியான விசாரணைகளுக்கு அமைவாக, டொயோட்டா லேண்ட் குரூசர் வகையான வாகனம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்த சட்டவிரோத பதிவு தொடர்பான உண்மைகள் வெளிப்பட்டுள்ளன.

அதன்படி, சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 500,000 ரூபா மதிப்புள்ள ஐந்து சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டார்.

இதற்கு மேலதிகமாக, குறித்த நபருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று பேருந்துகளின் முழுமையான உரிமையை மாற்றி அவற்றை கையகப்படுத்த இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த வருடம் ஒக்டோபரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here