11,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டு கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் அலுவலக உதவியாளர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 28 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம், அந்த தண்டனையை 7 ஆண்டுகளில் அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், பிரதிவாதிக்கு 31,000 ரூபா அபராதம் விதிக்கப்படுவதாகவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஹேன் வீரமன் தீர்ப்பை அறிவிக்கும் போது தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 சிசிடிவி கேமரா பெட்டிகளை வரி செலுத்தாமல் விடுவிப்பதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 11,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பாக, பிரதிவாதிக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு 2016 செப்டம்பர் 19ஆம் திகதியன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக அரசுத் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, பிரதிவாதிக்கு மேற்படி தண்டனைகள் விதிக்கப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.