கல்முனையில் கஞ்சாவுடன் பிரபல வர்த்தகர்கள் இருவர் கைது.!

0
158

பெருந்தொகையான கேரளக் கஞ்சாவுடன் பிரபல வியாபாரிகள் இருவர் கல்முனை விசேட அதிரடிப் படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் மறைந்திருந்த ஒரு சந்தேக நபரும் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்பர் கிரா சனசமூக வீதி முன்பாக உள்ள பகுதியில் மறைந்திருந்த மற்றுமொரு சந்தேகநபரும் கைதாகினர்.

கல்முனை விசேட அதிரடிப் படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரசகிய தகவல் ஒன்றிற்கமைய தேடுதல் மேற்கொண்ட போது இவ்விரு சந்தேக நபர்களும் பெருந்தொகையான கேரளா கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் கல்முனை விசேட அதிரடிப்படையினர் இன்று (5) அதிகாலை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 54, 62 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் நீண்ட காலமாக இச்சந்தேக நபர்கள் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை உள்ளிட்ட பகுதிகளில் கேரளா கஞ்சாவினை விற்பனை செய்தும் விநியோகித்தும் வந்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைதான இருவரில் 7 கிலோ கேரளா கஞ்சாவினை வைத்திருந்தவர் பெரிய நீலாவணை அக்பர் வீதியை சேர்ந்த பிரபல கைக்கடிகாரம் திருத்தும் நபர் என்பதுடன், 4 கிலோ கேரளா கஞ்சாவினை வைத்திருந்த மற்றைய சந்தேகநபர் கல்முனை நகரில் அமைந்துள்ள பிரபல ஆடையகத்தை நடாத்தி வந்தவர் என்பதும் மேலதிக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேகநபர்கள் வசம் இருந்து பெருமளவான கேரளா கஞ்சா பொதிகள் ஒரு மோட்டார் சைக்கிள், 5 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் உள்ளிட்ட பொருட்களை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை கல்முனை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here