தமிழ்நாடு வடலூரில் தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த சூர்யா, சினேகா ஆகியோருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த தம்பதியின் நான்காவது குழந்தை மைதிலி. ஒன்றரை வயதான இந்த பெண் குழந்தை, நேற்று முன்தினம் பிற்பகல் நேரத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அடுப்பு பற்ற வைப்பதற்காக வாட்டர் பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த டீசலை தண்ணீர் என நினைத்து அந்த பிஞ்சுக் குழந்தை குடித்ததாகச் சொல்லப்படுகிறது.
அதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் குழந்தை மைதிலியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் குழந்தை உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.