நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள ஊர்காடு, மேலக்காலனி நடுத்தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (30). இவரது மனைவி சுதா (28). பேச்சிமுத்து அம்பை, புதுக்காலனி, மூடபள்ளம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். அப்போது சுதாவுக்கும், இன்னொருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அவரது கணவர் பேச்சிமுத்து கண்டித்துள்ளார்.
இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பிப்.2ம் தேதி இரவு 9 மணியளவில் பேச்சிமுத்து மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர், சுதாவை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுதா திடீரென அவரது சேலையால் கணவரின் கழுத்தை இறுக்கி நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி பேச்சிமுத்து இறந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அம்பை போலீசார் சுதாவிடம் விசாரித்தனர். அப்போது கொலை செய்ய பயன்படுத்திய சேலையை மறைத்து வைத்துவிட்டு, சுதா தன்னுடைய கணவர் குளிர் காய்ச்சலில் இறந்து விட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் பிரேத பிரிசோதனையில் பேச்சிமுத்துவின் கழுத்து நெரிக்கப்பட்டதில் அவர் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நெல்லை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், நீதிபதி பன்னீர்செல்வம் நேற்று தீர்ப்பளித்தார். சுதாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். (பிரதி)