அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது; விளக்கும் சஜித் பிரேமதாச..!

0
86

வறுமையை ஒழிப்பதற்கு முன்னர் காணப்பட்ட திட்டங்களை விட அஸ்வெசும சிறந்ததெனக் கூறுவதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

‘எதிர்காலத்துக்கான பட்ஜெட்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்ட போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள வறுமை நிலை தொடர்பில் எவ்வித புரிதலும் இன்றி அஸ்வெசும திட்டத்தின் வெற்றி குறித்து எவ்வாறு தீர்மானிக்க முடியும்? வறுமை நிலை தொடர்பில் சரியான தரவுகள் அரசாங்கத்திடமும் இல்லை.

வறுமை நிலை அதிகரித்தமை தொடர்பில் சர்வதேச நிறுவனமொன்று தரவுகளை வெளியிட்டிருந்தது. அதற்கமைய மூன்றில் ஒரு பகுதி மக்கள் வறுமையிலிருப்பதாகக் கூறப்பட்டது.

அந்த வகையில் முன்னர் காணப்பட்ட வறுமை நிலைமையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்களை விட, அஸ்வெசும வேலைத்திட்டம் சிறந்தது எனக் கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

காரணம் அது திட்டமிடலற்ற, பெருமளவில் அரசியல் மயமாக்கப்பட்ட, தொழிநுட்ப அடிப்படையிலன்றி, தரவுகள் இன்றி நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமாகும் என எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பேராசிரியர் சிறிமல் அபேரத்ன…

முன்னர் காணப்பட்ட சமூர்த்தி உள்ளிட்ட வேலைத்திட்டங்களுடன் ஒப்பிடுகையில் அஸ்வெசும சிறந்த திட்டம் எனக் குறிப்பிடுவதற்கான காரணம் அவற்றில் காணப்பட்ட அரசியல் தலையீகளை விட இத்திட்டத்தில் அவ்வாறான போக்கு அவதானிக்கப்படவில்லை என்பதனாலாகும்.

எனவே முந்தைய திட்டங்களுடன் ஒப்பிடுகையில் அஸ்வெசும திட்டத்தில் சிறந்த விடயங்கள் பல காணப்படுகின்றன.

இந்த திட்டத்தில் பண பரிமாற்றம் வங்கி முறையூடாக முன்னெடுக்கப்படுதல் உள்ளிட்டவற்றை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகின்றோம்.என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here