சாய்ந்தமருதில் 18 கிலோ 169 கிராம் கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் – சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (10) திங்கட்கிழமை காலை வேளையில் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் கடந்த (04) திகதி கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது 33 வயது மதிக்கத்தக்க ஒருவரின் வீட்டினை சோதனை செய்த வேளையில், கட்டிலின் கீழ் பகுதியில் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் இருந்து 18 கிலோகிராம் 169 கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த கைது நடவடிக்கையானது, கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.