24 வயது குடும்பஸ்தர் உயிரிழப்பு.. 4 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது.!

0
177

வாத்துவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்த நபர் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தின் நான்கு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பாணந்துறை குற்றத்தடுப்பு விசாரணை பணியகத்தால் இன்று (12) மாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக இந்த நான்கு பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நான்கு கான்ஸ்டபிள்களும் நாளை (13) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் பாணந்துறை குற்றத்தடுப்பு விசாரணை பணியகத்தால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வாத்துவை தல்பிட்டியவைச் சேர்ந்த 24 வயதான ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

கடந்த 10 ஆம் திகதி இரவு நடமாடும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வாத்துவை பொலிஸ் அதிகாரிகள் குழுவால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், வீடு திரும்பிய போது திடீர் சுகவீனமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக, அவரது உறவினர்கள் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து கைதின் போது பொலிஸாரால் அவர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் வாகன விபத்து தொடர்பாக வாத்துவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் முன்பு கூறியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here