கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள காவலர் பிரிவுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பான அறிக்கையை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வௌியிட்டுள்ளது.
குறித்த தகவலில்…
”முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் பரப்பும் செய்தி பொய்யானது.
இச்செய்தியை சரிபார்க்கும் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்த உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகாமையில் உள்ள மற்றுமொரு இடத்தில் நிலுவைத்தொகை செலுத்தப்படாத காரணத்தினால் இன்று நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த இடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் அல்ல. இது தொடர்பில், தற்போது குறித்த இடத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரிடம் பிரதிப் பொது முகாமையாளர் (வர்த்தக) மேற்கொண்ட விசாரணைகளின் போது…
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் அந்த இடத்தில் வசிப்பதாகவும், அவர்கள் 2024 ஒக்டோபர் மாதம் அங்கிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தரோ அல்லது முன்னாள் ஜனாதிபதியோ அந்த இடத்தின் நீர் விநியோகத்தில் இருந்து நீரை பயன்படுத்த மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் நீர் கட்டணம் முன்னர் ஜனாதிபதி செயலகத்தினால் செலுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த நிலுவைத் தொகையை உரிய இடத்தில் செலுத்துமாறு இந்த அதிகாரிகளுக்கு எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் பலமுறை அறிவிக்கப்பட்டு இன்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்று நிலுவைத் தொகையை வழங்குமாறு தெரிவித்தனர்.
நிலுவைத் தொகை செலுத்தாததால், சம்பந்தப்பட்ட இடத்தில் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது, (வசூலிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ.429,000 ஆகும்.)
இதன்படி, இந்த இடத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டமையால் முன்னாள் ஜனாதிபதிக்கோ அல்லது அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என்பது எமது அவதானமாகும்.” என குறிப்பிடப்பட்டிருந்தது