எல்ல சுற்றுலா நகரத்திற்கு அருகிலுள்ள எல்ல மலைத்தொடர் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் இன்று (14) காலை 20 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் வனப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு ஏற்கனவே எரிந்துவிட்டது.
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராவணா எல்ல வனப்பகுதியில் நேற்று (13) மாலை 4 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இருப்பினும், இந்த தீ யாரோ ஒருவரால் மூட்டப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு சுமார் 15 பாடசாலை மாணவர்கள் கொண்ட குழு ராவணா எல்ல வனப்பகுதியின் ஒரு பகுதிக்கு தீ வைத்தது.
பின்னர் நீதிமன்றம் தொடர்புடைய மாணவர்களுக்கு குறித்த பகுதியில் மரங்களை நாட்டுவதற்கு உத்தரவிட்டது.
ராவணா எல்ல வனப்பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ, எல்ல மலைத்தொடர் முழுவதும் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, பண்டாரவளை வன பாதுகாப்பு அதிகாரிகள் எல்ல பிரதேச செயலகம் மற்றும் தியத்தலாவை விமானப்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் நேற்று முதல் தீயைக் கட்டுப்படுத்த கடுமையாக போராடி வருகின்றனர்.
நிலவும் வறண்ட வானிலை, காற்று வீசும் சூழ்நிலை மற்றும் செங்குத்தான சரிவுகள் காரணமாக தீ வேகமாகப் பரவி வருவதால், தீயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது.
மேலும், தீ எல்ல-வெல்லவாய பிரதான வீதியை அடைவதைக் கட்டுப்படுத்த பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களின் உதவியைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.