யாழ்ப்பாணம் (Jaffna) சங்கரத்தை பகுதியில் உள்ள திக்கிராய் குளத்திற்கு அருகிலுள்ள கிணற்றினுள் இன்றையதினம் (17) தவறுதலாக விழுந்த குழந்தையும் தாய் மாமனும் பலியாகி உள்ளனர்.
விஸ்வமடு ரெட்பானா, முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த தனுசன் டனுசன் என்ற 03 வயது ஆண் குழந்தையும், கல்லூரி வீதி, வட்டுத்தெற்கு வட்டுக்கோட்டையை சேர்ந்த பெருமாள் மகிந்தன் (வயது-30) என்ற தாய் மாமனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்…
குறித்த குழந்தையும் தாய் மாமனும் கிணற்றினுள் விழுந்துள்ள நிலையில், குழந்தை மேலே மிதந்ததை அவதானித்தவர்கள் குழந்தையை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர், இருப்பினும் குழந்தை உயிரிழந்துள்ளது.
பின்னர் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் குழந்தையின் மாமனை மீட்டு முதலுதவி அளித்தபோதும் அவரும் உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக இரண்டு சடலங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.