வரவு – செலவுத் திட்ட வரலாற்றில் கல்விக்கு அதிக தொகை ஒதுக்கீடு..!

0
10

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நிதியமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கல்விக்கு வரலாற்றில் அதிக தொகை இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கல்வி நிலையை உயர்த்துவதற்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் பின்வருமாறு.முன்பள்ளி சிறார்களின் போசனையை அதிகரிக்க, காலை உணவு வழங்குவதற்காக ஒரு வேலை உணவுக்கு வழங்கப்படும் 60 ரூபாவினை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டது. அதற்காக 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

தெரிவுசெய்யப்பட்ட ஆரம்பகால சிறு பராய அபிவிருத்தி நிலையங்களின் அபிவிருத்திக்காக ரூ.80 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

முன்பள்ளி ஆசிரியர்களின் சேவைகளுக்காக தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை 1000 ரூபாவினால் அதிகரிக்க 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாயும் பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக 135 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் முன்மொழியப்பட்டது.

தற்போதுள்ள பாடசாலை முறைமையை மீளாய்வு செய்து தேசிய திட்டமொன்றை தயாரிப்பதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை 750 ரூபாயில் இருந்து 1500 ரூபா வரையில் அதிகரிக்க 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

விளையாட்டுத் துறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு மேலதிக உணவு உதவித்தொகை 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தவும், தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகையை 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக அதிகரிக்கவும் ரூ. 200 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல உதவித்தொகையை ரூபா 5,000 இலிருந்து ரூபா 7,500 ஆக அதிகரிக்கவும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாணவர் உதவித் தொகையை ரூபா 4,000 இலிருந்து ரூபா 6,500 ஆக அதிகரிக்கவும் 4,600 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

உயர்தர பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக திறமையானவர்களுக்கு வெளிநாடுகளில் கல்வி கற்கத் தேவையான ஏற்பாடுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க 200 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள நூலகங்களை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.

ஐந்து மாகாணங்களில் விசேட விளையாட்டுப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here