நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு அனைத்து வழக்கறிஞர்களும் இனி சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய இன்று தெரிவித்தார்.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ, நீதிமன்ற வளாகத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வழக்கறிஞர் வேடமணிந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக முதற்கட்ட விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன, மேலும் அந்த நபரை அடையாளம் காணும் சிசிடிவி காட்சிகளும் உள்ளன.
இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கமு் போதே பதில் பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், “இந்த துப்பாக்கிச் சூடு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கும் போதைப்பொருள் கும்பல்களுக்கும் இடையிலான மோதல்களின் விளைவாகும்.
இன்றைய துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர்கள் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சோதனை இல்லாததை பயன்படுத்திக் கொண்டதாக சுட்டிக்காட்டிய அவர், இனி நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு வழக்கறிஞர்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஆயுதமேந்திய அதிகாரிகளை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தும் அனுமதி பெறப்படும் என்றும் அவர் கூறினார்.