புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ குமார சமரரத்ன கொல்லப்பட்டார்.
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி கனேமுல்ல சஞ்சீவ குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, சந்தேக நபர் இன்று (19) காலை பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குவழக்கு ஒன்றிற்காக அழைத்து வரப்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
கனேமுல்ல சஞ்சீவ மீது 19 கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் பாதாள உலகக்குழு உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவின் முக்கிய போட்டியாளராவார்.
கெஹல்பத்தர பத்மேவின் தந்தையைக் கொலை செய்ததாக கணேமுல்லா சஞ்சீவ மீது குற்றம் சாட்டப்பட்டது.
துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ள நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். Video👇👇